பாலாராம் மான்கர்
என்ற இல்லறவாசியான பாபாவின் அடியவர் ஒருவர் தம் மனைவி காலமான பின்பு பெரிதும் சஞ்சலமடைந்தார். வீட்டுப் பொறுப்பைத் தன் மகனிடம் ஒப்புவித்துவிட்டு, வீட்டைத் துறந்து ஷீர்டி சென்று
பாபாவுடன் வாழ்ந்து வந்தார். பாபா அவர் தம் பக்தியால் மகிழ்ந்து, அவரின் வாழ்க்கைக்கு ஒரு நல்ல திருப்பத்தை அளிக்க விரும்பினார். அதை அவர் இவ்வாறாகச் செய்தார். அவருக்கு ரூ.12 அளித்து சாதாரா ஜில்லாவில் உள்ள
மச்சிந்த்ரகட்டுக்குச் சென்று வாழும்படி
கோரினார். மான்கர் முதலில் பாபாவைப் பிரிந்துசென்று அங்கு தங்குவதில் மனமில்லாதவராய்
இருந்தார். ஆனால் இதன்மூலம் அவருக்கொரு சிறந்த வாழ்க்கைமுறையைக் கொடுத்துள்ளதாக
உறுதிகூறி அவரைத் தேற்றினார்.
ஒரு நாளைக்கு
மூன்று முறை தியானம் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். பாபாவின் சொற்களை நம்பி மான்கர்மச்சிந்த்ரகட்டுக்கு
வந்தார். இன்பமான காட்சிகள், தூயநீர், ஆரோக்கியமான காற்று, சுற்றுப்புறம் இவற்றால் மிகவும் மகிழ்ந்து ஏகாக்கிர சித்தத்துடன் பாபா
அறிவுறுத்தியபடி தியானம் செய்யத் தொடங்கினார். சில நாட்களுக்குப் பிறகு ஒரு தெய்வீகக்
காட்சி அவருக்கு ஏற்பட்டது. அடியவர்கள் பொதுவாக அவர்களது சமாதி நிலையில் அல்லது
தியானத்தில் தான் அதனைப் பெறுகிறார்கள். ஆனால் மான்கரைப் பொறுத்தமட்டிலோ, தியான நிலையிலிருந்து விடுபட்டு சாதாரண நிலைக்கு வந்தபோதே அதை
அவர் பெற்றார். பாபா தாமே அவர்முன் தோன்றினார். மான்கர் அவரைப் பார்த்தது மட்டுமல்லாது தான் ஏன் அங்கு அனுப்பப்பட்டிருக்கிறார்
என்றும் கேட்டார்.
பாபா பதில் அளிக்கையில், "ஷீர்டியில் பல்வேறு எண்ணங்களும், கருத்துக்களும் உன் மனதில் உருவாக ஆரம்பித்தன. உனது நிலையற்ற மனதை அடக்கவே இங்கு உன்னை அனுப்பினேன். நான் ஷீர்டியில் இருப்பதாக நீ எண்ணுகிறாய். பஞ்ச பூதங்களால் ஆனதும், 3 1/2 முழ நீளம்
ஆனதுமாகிய உடம்பில் நான் வசிக்கிறேன் என்றும் அதற்கு வெளியில் நான் இல்லை என்றும் நீ நினைக்கிறாய். இப்போது நீ கண்ணார ஷீர்டியில் கண்ட அதே மனிதர்தானா இவர் என்று தீர்மானித்துக்கொள். இந்த காரணத்திற்காகத்தான் உன்னை நான் இங்கு அனுப்பினேன்"
என்று கூறினார்.
குறிப்பிட்ட காலம்
முடிந்த பின்னர் மான்கர் மச்சிந்த்ரகட்டை நீங்கி தன் சொந்த ஊரான பாந்த்ராவை நோக்கி புறப்பட்டார். புனேவில் இருந்து தாதர் வரை அவர் ரயிலில் பிரயாணம் செய்ய விரும்பினார். ஆனால் அவர் டிக்கெட் பெற புக்கிங் ஆபீசுக்கு சென்றபோது மிகவும்
கூட்டமாக இருப்பதைக் கண்டார். விரைவில் அவரால் டிக்கெட் பெற முடியவில்லை.
அப்போது தனது
இடுப்பில் கோவணத்துடன் ஒரு கிராமவாசி அவரருகில்
வந்து, "நீங்கள் எங்கு போகிறீர்கள்?" எனக் கேட்டார். மான்கர், "தாதருக்கு"
என்று பதிலளித்தார். அவர், "தயவுசெய்து என்னுடைய தாதர் டிக்கெட்டை
எடுத்துக்கொள்ளுங்கள். இங்கு எனக்கு சில அவசர வேலைகள் இருப்பதால் நான் தாதர்
பயணத்தை இரத்துச் செய்துவிட்டேன்" என்று சொன்னார். மான்கர்
டிக்கெட்டைப் பெற்றுக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைந்தார். பணத்தைத் தம் பையிலிருந்து எடுத்துக்கொண்டிருக்கும்போது அந்த கிராமவாசி கூட்டத்தில் மறைந்துவிட்டார். மான்கர், அவரைக் கூட்டத்தில் தேடியும் பயனில்லை. ஸ்டேஷனைவிட்டு
வண்டி போகும்வரை மான்கர் அவருக்காகக் காத்திருந்தார். ஆனால் அவரைப்பற்றி
எவ்விதச் சுவட்டையும் அவர் காணவில்லை.
இது மான்கர்
விநோதமாகப் பெற்ற இரண்டாவது காட்சியாகும். மான்கர் பின்னர் தனது வீட்டிற்குச் சென்றுவிட்டு
மீண்டும் ஷீர்டிக்குத் திரும்பி பாபாவின் ஏவலையும், சேவையையும் செய்துவந்தார். அங்கேயே பாபாவின் பாதங்களிலேயே இருந்தார். பாபாவின் முன்னிலையிலேயே அவருடைய ஆசீர்வாதங்களுடனேயே இந்த உலகத்தைத் துறக்கும் நல்லதிர்ஷ்டம் படைத்திருந்தார்.
அனந்தகோடி
ப்ரம்மாண்ட நாயகா ராஜாதிராஜ யோகிராஜ பரப்ரம்மோ ஸ்ரீஸச்சிதானந்த சத்குரு சாய்நாத்
மஹராஜ் கீ ..... ஜெய்.
No comments:
Post a Comment