Friday, May 13, 2016

கல்கி

பெருமாளின் அவதாரங்களில் இது பத்தாவது அவதாரம்: ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் எடுத்து உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்வார் எனஎதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த கலியுகத்தை காப்பாற்ற பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுத்துவிட்டாரா? அல்லது இனிமேல் தான் எடுக்கப்போகிறாரா? என்று சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும். இந்த கலியுகத்தில் இருந்து நம்மை காப்பாற்றும் படி, விஷ்ணுவை சரணடைந்து அவரது நாமத்தை சொல்லி, செய்யும் செயல்களை எல்லாம் அவர்க்கு சமர்ப்பணம் செய்து, அவரே சரணம் என்று வாழ்வதே இந்த கலியுகத்திலிருந்து நாம் மீண்டு இறைவனை அடையும் வழியாகும். கிருஷ்ண அவதாரம் முடிந்து பகவான் வைகுண்டம் சென்றதும் கலி புருஷன் பூலோகத்திற்குள் நுழைந்து விட்டான். அவன் ஆட்சியினால் தர்மம் நசிந்து விடும் என அறிந்த தருமபுத்திரர் முதலிய பாண்டவர்களும் கிருஷ்ணனைத் தொடர்ந்து வைகுண்டம் போனார்கள். கலி பிறந்ததும் கலி தோஷத்தால் மக்கள் உடல் மெலியும். அவர்களுடைய பிராண சக்தி குறைந்து போகும். வர்ணாசிரமம் நிலை குலையும். வேததர்ம மார்க்கங்கள் மறைந்து விடும். ஆளும் அரசர்கள் திருடர்கள் போல் ஆவார்கள். தர்மம் பாஷாண்டம் மயமாகும். ஆளப்படும் மாந்தர்களும் திருட்டு, பொய் மற்றும் வீணான அபவாதங்களுக்கு ஆட்படுவர். பந்துக்கள் மைத்துனன்மார்களாக நடந்து கொள்வர். வர்ணங்கள் எல்லாமே சூத்திர வண்ணமாக மாறும். பசுக்கள் ஆடுகள் போல மெலியும். முனிவர்களின் ஆசிரமங்கள் என்று சொல்லப்படுபவை கிருகஸ்தாஸ்ரமத்திற்குள் போய்விடும். தாவரங்களில் மரங்கள் வன்னி மரங்களைப் போலக் காணப்படும். செடிகள் அணுவெனச் சிதைந்து விடும். மேகங்களில் மின்னல்கள் மிகும். தர்மானுஷ்டாணம் அற்றுப் போவதால் வீடுகள் சூன்யப் பிரதேசம் ஆகும். மக்கள் கழுதைகளின் தர்மங்களை உடையவர் என ஆவார்கள். இப்படிக் கலி முற்றிய நிலையில் பகவான் சத்துவ குணத்தால் மீண்டும் அவதாரம் செய்வார்.

சராசர குரு என்றும், சர்வஸ்வரூபி என்றும் ஈஸ்வரரான விஷ்ணுவுடைய அவதாரம் தர்மத்தைக் காப்பாற்றவும், சாதுக்களை அவர்களுடைய கர்மத்தளைகளிலிருந்து நீக்கி மோட்சம் அளிக்கவும் ஏற்படும்.சம்பளக் கிராமத்தில் முக்கியமானவரும், மகாத்மாவுமாகிய கல்கி என்ற பெயருடன் பகவான் அவதரிப்பார். அணிமாதி அஷ்டமா சித்தியுடன், சத்திய சங்கல்பம் முதலிய குணங்களுடன் லோகநாயகன், வேகமாகச் செல்லும் குதிரை மீது ஏறிக்கொண்டு கத்தியால் தீயோரை அடக்குவார். ஒப்பற்ற வேகம் கொண்ட குதிரை மீது ஏறி விரைவில் உலகெங்கிலும் சஞ்சாரம் செய்து, அரச வேடம் தாங்கி மறைவில் வாழும் திருடர்களை கோடிக்கணக்கில் சம்ஹாரம் செய்வார். துஷ்டர்கள் அழிவர். அதன் பின்பு புண்ணிய வாசனை கலந்த காற்றினால் தீண்டப் பெறும் நாடு நகர மக்கள் உள்ளம் தெளிவு பெறும். அவர்களது உள்ளத்தில் சத்துவகுண சீலரான பகவான் வாசம் செய்வார். அவர்களுடைய சந்ததி நல்ல வகையில் நல்லவர்களாக பன்மடங்கு பெருகும். தர்மத்திற்கு உறைவிடமான பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுக்கும் பொழுது இந்த உலகம் பழைய கிருதயுகம் எப்படி இருந்ததோ அதன்படி மாறும். மக்களின் பிறப்பும், சாத்வீகமாகத் திகழும். சூரியன், சந்திரன், குரு ஆகிய மூவரும் பூச நட்சத்திரத்தில் ஒரே ராசியில் எப்பொழுது கூடுகிறார்களோ அதுவே மறுபடித் தோன்றக்கூடிய கிருதயுகம் எனப்படும். ஸ்ரீ ஹரியின் தசாவதாரக் கதைகளை ஏகாதசி, துவாதசி காலங்களில் படித்தாலோ, கேட்டாலோ நமக்கு அளவில்லாத மகிழ்ச்சியும், மங்கலமும் உண்டாகும் என ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. யுகங்கள் நான்கு வகைப்படும். அவை கிருத யுகம், திரோதா யுகம், துவாபர யுகம், கலியுகம். இதில் கிருத யுகம் - 17, 28, 600 வருடங்களும், திரோதா யுகம் - 92, 96, 000 வருடங்களும், துவாபர யுகம் - 8, 64, 000 வருடங்களும், கலியுகம் - 4, 32, 000 வருடங்களும் கொண்டது. இந்த நான்கும் சேர்ந்தால் ஒரு சதுர் யுகம் ஆகும். கலியுக முடிவு பற்றி வள்ளல் பெருமான் ராமலிங்க சுவாமிகள் தரும் குறிப்பு: முதல் யுகத்திற்கு நாள் எட்டு, 2வது யுகத்திற்கு நாள் ஆறு. 3வது யுகத்திற்கு நாள் நான்கு. 4வது யுகத்திற்கு நாள் இரண்டு. ஆகக்கூடிய நாள் இருபதும் கற்பம் முடிக்கக் கூடிய நாள்கள் (அதாவது ஓர் ஆயிரம் சதுர் யுகம் என்பது ஒரு கல்பமாகும்.) 60*60*60 = 216000 நொடி = 1 நாள். அதாவது, நாள் ஒன்றுக்கு நாழிகை 60. நாழிகை ஒன்றுக்கு வினாடி 60. வினாடி ஒன்றுக்கு நொடி 60. இப்படி நாளிரண்டிற்கு 4, 32, 000 நொடி. இந்த 4, 32, 000 நொடியும் வருஷமாக கலியுகத்திற்கு சொல்லப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...