Monday, May 16, 2016

நூறு விழுக்காடு அற்புதம் செய்வேன்

சென்னையைச் சேர்ந்த சுலோச்சனா அம்மா சீரடியில், “உங்களுக்கு பாபா என்ன செய்திருக்கிறார்? அதை எப்படி பெற்றிருக்கிறீர் என்பதைப் பற்றி எங்களுக்குச் சொன்னால், நாங்களும் பயன்பெற முடியும் எனக் கேட்டார்.
பாபா எனக்கு நூறு விழுக்காடு நன்மைகள் செய்திருக்கிறார். இன்றைக்கு நாங்கள் பிழைத்து இருப்பதும், உயர்ந்து நிற்பதும், ஆலயம் எழுப்பி சேவை செளிணிவதும் எல்லாம் அவராலேதான்.
நான் பக்தியை மற்றவர்கள் போல் சிரத்தை மனத்துடன் செய்கிறேனா என்பது எனக்குத்தெரியாது. யதார்த்தமாக பக்தி செய்கிறேன்.
உன்மேல் பக்தி செய்வதற்காக நான் என்னை ஒரு போதும் மாற்றிக்கொள் மாட்டேன்;  பத்திரிகை ஆசிரியராக எப்படியிருந்தேனோ, மற்றவர்களிடம் எப்படி இயல்பாக நடந்துகொண்டேனோ அப்படித்தான் வாழ்வேன். என்னை மாற்ற முயற்சி செய்யக்கூடாது. உனக்கு முடியுமானால் எனக்காக நீ மாறிக்கொள் என்றுதான் பாபாவிடம் வேண்டிக்கொண்டேன்.
இன்றுவரை அப்படித்தான் வாழ்ந்துவருகிறேன். பாபா எனக்காக தன்னை மாற்றிக்கொண்டார்.நான் பக்தி செய்வதை மூன்றாகப் பிரித்துக் கொள்ளலாம்.
1. நடத்தை அல்லது செயல் சார்ந்தது
2. உணர்ச்சி மயமானது
3. ஞானத்தேடல்
நடத்தை அல்லது செயல் சார்ந்த பக்தி
எந்த ஒன்றையும் அனுபவிக்காமல் கேள்வி அறிவைக் கொண்டு, இது சிறந்தது என்று சொல்லப்படுமானால் அதில் சிறப்பிருக்காது, திருப்தியும் இருக்காது. அதை நாம் அனுபவித்த பிறகுதான் அதைப் பற்றிய முழு அறிவும் நமக்கு ஏற்படும். இந்த உண்மை யாவரும் அறிந்ததே.
இதேபோல்தான் நான் கேள்விப்பட்ட சாயி பாபாவை அனுபவத்தில் கொண்டுவர முயற்சி செய்தேன். பாபா உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? அவர் எனக்கு உதவி செய்யத்தகுதிபெற்றவரா இல்லையா? பக்த பரிபாலனம் செய்பவரா? சோதனை என்ற பெயரில் பாதியில் கழற்றி விட்டுவிடுபவரா?
இப்படி நிறைய ஆராய்ச்சி செய்து அவரை நான் சோதித்து அதன் பிறகு அவரைப் பற்றிக்கொண்டு வணங்க ஆரம்பித்தேன். நான் செய்கிற எந்த செயலானாலும் நல்லது கெட்டது உயர்ந்தது, தாழ்ந்தது; போற்றற்கு உரியது, தூற்றுதலுக்கு ஏற்றது என எதுவாயினும் அது அவரால் நடக்கிறது என்பதை உணர்ந்து அவருக்குச் செயல்களையும் அதன் பலன்களையும் முதலில் அர்ப்பணம் செய்தேன்.
முன்பெல்லாம் எதைச் செய்தாலும் அதை நான் செய்வதாகவும் இதற்கு நான்தான் காரணகர்த்தா என்றும் நினைப்பேன். ஆனால் சாயி பாபாவை வணங்க ஆரம்பித்தபிறகு, எதையும் நான் செய்யவில்லை, செய்யவைக்கப்படுகிறேன் என்பதை உணர்ந்துகொண்டேன். இதனால் எதுவாக இருந்தாலும் பாபா நான் செய்கிறேன், நீ பார்த்துக்கொள் என ஒவ்வொரு விஷயத்தையும் அவர் பொறுப்பில் விட்டேன்.
என் பிள்ளைகள் விஷயமாக இருந்தாலும் பாபா! தம்பி போகிறான், கூடவே போங்கள், அவனது பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அதோடு அதை மறந்துவிடுவேன்.
இன்பம் வந்தாலோ, துக்கம் வந்தாலோ அந்த நேரத்தில் அனுபவிப்பதோடு சரி, அதை மனதில் தேக்கி வைத்துக்கொள்ள மாட்டேன். மன எழுச்சி ஏற்படும் நேரத்தில் பாபா இதை என் தலையில் கட்டாதீர்கள், எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லிவிட்டு அதை அப்படியே விட்டுவிடுவேன்.
இளம் வயதிலிருந்தே உண்மையாக உழைப்பதை தர்மமாக கடைப்பிடித்து வருகிறேன். உழைப்பில் ஏமாற்றுவது இறைவனை ஏமாற்றிப்பிழைப்பது என்பதால் அதைச் செய்யமாட்டேன். எனக்கு அறிவு இரண்டு விழுக்காடுதான் செயல் படும், உழைப்புதான் மற்ற சதவிகிதம். இதுவும் அவரால்தான் நடக்கிறது என அவர் மேல் பாரத்தை வைத்துவிடுகிறேன்.
இப்படி, எனது செயல்பாடுகளை சரி செய்து கொள்வதன் மூலம், நடத்தைகளையும் சரிசெய்து கொள்கிறேன். இதனால் மன உறுத்தல் இன்றி என்னால் சாயி பாபாவை வணங்க முடிகிறது.
இந்த செயல்பாடு சார்ந்த பக்தியை நான் கர்ம யோகம் என சொல்லிக்கொள்வேன்.
உணர்ச்சி மயமானது
எனது சுயநலத் தேடலுக்காகத்தான் அவரை முதலில் தேடினேன், நாடினேன். ஏதாவது பெரிய ஒன்றாகத்தான் கடவுள் செய்வார் என நம்பிக்கொண்டிருந்தேன். அவரோ, சின்னச் சின்ன விஷயங்களைக்கூட துல்லியமாக செய்து தருகிறார்.
இப்படி யாராவது செய்வார்களா? அதற்கு நான் தகுதியானவன்தானா? என்று நினைக்கும் போது என்னை அறியாமல் உள்ளம் உடைந்து போகும்; கண்ணீர் ஆறாகப் பெருகும்.
அவரது திருநாமத்தைக் கேட்கும்போதும், உச்சரிக்கும்போதும் உடலில் பரவச உணர்வு பரவுவதை உணர்வேன். இன்றுவரை ஸ்ரீ ராமரைப் பற்றி நினைத்தாலோ, கண்ணனின் அன்பைப்பற்றி நினைத்தாலோ, சீதையின் தியாகத்தை எண்ணினாலோ உணர்ச்சி வசப்பட்டுவிடுவேன்.
அன்றாட வாழ்வில் பாபா என்னிடம் கொண்டு வருகிற ஈடுபாட்டை நினைத்து நினைத்து நான் உடைந்து உடைந்து போவதால்தான் அவரை மறக்கமுடியாமலும், வேறு ஒன்றை நினைக்க முடியாமலும் தவிக்கிறேன்.
நான் என் மனைவியை அதிகமாக நேசித்து வந்தேன், அவளைவிட என் பிள்ளைகளை அதிகம் நேசித்து அவர்கள் நினைவாகவே வாழ்ந்துவந்தேன். இந்த பாபா அந்த நினைவுகளைப் பிடுங்கி தன் வசப்படுத்திக் கொண்டார். எப்போதும் அவரது நினைவாகவே இருக்கிறது.
தூங்கினாலும் தூக்கத்திலிருந்து விழித்தாலும் அவர் நினைவாகவே இருக்கிறது. வேறு ஒன்றை மனம் நாட மறுக்கிறது. நாட்கள் செல்லச்செல்ல இந்த நிலை குறையும் என நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே போகிறதே தவிர குறைந்த பாடில்லை.
என் மீது அக்கறை கொண்டவர்களில் என் மனம்தான் முதலானவர் என நினைத்தேன். இப்போதோ அதுகூட இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்.
இந்த உணர்வு நிலையில்தான் அவரது திருநாமாவை எப்போதும் மனதில் நினைக்கிறேன். சுவாசம்கூட சாயிசாயி என போவதாக உணர்ந்து கொள்கிறேன். ஊமையின் உணர்வுகளைப் போல அதை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை, தெரியவும் இல்லை. அனுபவிக்க மட்டுமே முடிகிற இந்த நிலையால் நான் என்னை மறந்துவிடுகிறேன்.
எப்படி ஒரு காதலனும் காதலியரும் தங்கள் காதலை பிறர் அறியா வண்ணம் வைத்துக்கொண்டு இருப்பார்களோ அப்படி எனது மன உணர்வுகளை மற்றவர்கள் அறியா வண்ணம் வைத்துக்கொள்ள நினைக்கிறேன். ஆனாலும் அது முடியாமல் போகிறது, மற்றவர்கள் எப்படியோ கண்டுபிடித்துவிடுகிறார்கள்.
இத்தகைய உணர்வுகள் எனக்கு அவர் மீது பக்தியைத் தரவில்லை, அன்பைத் தருகிறது. காதலைத் தருகிறது, காதலைவிட இன்னும் தாண்டி எதையோ தருகிறது. இதை பக்தியோகம் என நினைத்துக் கொள்வேன்.
ஞானத்தேடல்
நான் துவக்கத்தில் எனக்காகத் தேடிய எதுவும் நிரந்தரமல்ல என்பதை உணர ஆரம்பித்தேன். படித்து தெரிந்துகொள்கிற எதுவும் அனுபவம் ஆகிவிடாது, அதை அனுபவத்தில் கொண்டுவர வேண்டும் என்ற உத்வேகத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் அனுபவித்து அனுபவித்து அவற்றின் நிலையாமையைப் புரிந்துகொண்டு நான் தேடிச்செல்வது இதுவல்ல, இதுவல்ல என்றே போய்க் கொண்டிருக்கிறேன்.
இதற்கு முன் ஒரு புத்தகத்தைப் படித்தால், அது கதையாகவோ, வரலாறாகவோ இருக்கும் என நினைப்பேன். இப்போதோ, அது எனக்கு எதையோ கற்பிக்க முயற்சிக்கிறது என அதில் தேடுவேன்.
சத்சரித்திரம் பாபாவின் வாழ்க்கை வரலாறு எனப் பலர் நினைக்கிறார்கள். இல்லை, வாழவேண்டிய வழிகளைக்கூறும் புனிதநூல் என நினைக்கிறேன். கீதையை படிக்கும்போதுகூட, இதை கண்ணன் கூறினானா? வியாசர் தனது கருத்தைக் கூறினானா? சஞ்சயன் திருதராஷ்டிரனுக்குக் கூறினானா? இதை யார் எப்படி எடுத்துக்கொண்டார்கள்? இப்படி ஆராய்ந்து கொண்டிருப்பேன்.
நான் யார்? எங்கிருந்து வந்தேன்? சுவாமி எனக்கு ஏன் இந்தப் பிறவியைக் கொடுத்தார்? அவருடைய நோக்கம் என்ன? எதிர்பார்ப்பு என்ன? அதை நிறைவேற்ற நான் என்ன செய்ய வேண்டும்? இந்த தேகம் எதற்காக கிடைத்தது? இப்படி நினைத்து நினைத்துப் பார்ப்பேன்.
பிறருடைய கர்மாவை தனது தலையில் சுமத்திக்கொள்வதால் உடல்தான் ஒழியுமே தவிர, ஆன்மா அழியப்போவதில்லை என்பதால் தான் கூட்டுப்பிரார்த்தனை முறையைக் கையில் எடுத்தேன். பிறரை ஆசீர்வதிக்கவும் தயங்கவில்லை. தேகத்தின் பலன் பிறருக்காக வாழ்வது என்பதை அவர் புரிய வைத்தார்.
நான் ஞானம் அடையவேண்டுமானால் ஒரு மந்திரம் அல்லது ஒரு சாஸ்திரம் அல்லது ஒரு தெய்வ உபாசனை செய்தால் நலமென்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். உண்மையில் அது எதுவும் தேவையில்லை. நல்ல அடியார் தொடர்பு கிடைத்தாலே எல்லா பலனும் நமக்கு கிடைத்து விடும் என்பதை புரிந்துகொண்டு விட்டேன்.
ஆண்டவன் சேர்க்கைக்கு நிகரானது அடியார் சேர்க்கை என்பதால், அடியாரில் சிறந்தவர்களை நாடி அவர்கள் இதயத்தில் இடம் பிடிக்கும் செயல்களில் ஈடுபட்டேன். மக்களுக்குச் சேவை செய்தால்தான் சத்குருவின் மனதில் இடம் பிடிக்க முடியும் என்பதை அனுபவமாக அறிந்த பிறகு முடிந்தவரை முடிந்த வழியில் பிறர் நலம் காக்கப்பாடுபட முயற்சிக்கிறேன்.
ராகுகாலம், எம கண்டம், நல்ல நாள் பார்த்து எதையும் நான் செய்வதில்லை. எல்லா நாளும், காலமும் அவருக்கு உரியது என்பதால் அதில் கவனத்தைச் செலுத்தமாட்டேன். அலை எப்போது ஓய்வது தலை எப்போது மூழ்குவது என நினைத்து அப்போதே செயலில் ஈடுபட்டு விடுவேன்.
இப்படி ஒவ்வொன்றையும் ஆராய்ந்து ஞானத்தேடலில் ஈடுபடும்போது என்னையோ பிறரையோ காணவில்லை. எல்லோரும் ஒன்றாக இருப்பது போலவே உள்ளது, ஆனாலும் இந்த நிலை அதிக நேரம் நீடிப்பதில்லை. இது ஏன் என்பதும் புரியவில்லை.
நான் எனக்குள் ஆனந்த நடனம் பார்ப்பேன், அலைமோதும் கடலில் அனந்த சயனம் கண்டு ரசிப்பேன். நானே அந்தந்த உருவங்களில் மாறி இருப்பதுபோல உணர்வேன். இதெல்லாம் முற்றிய பைத்தியத்தின் அடையாளம் என நானே எண்ணிக்கொண்டு திரும்பி வந்துவிடுவேன்.
இதை ஞான யோகம் என நான் சொல்லிக்கொள்கிறேன்.
சுயநலத்தில் ஆரம்பித்து பொதுநலத்தில் நடந்து, எதையோ தேடிக்கொண்டிருக்கிறேன். உயர்கல்வி படிக்கும் ஒருவனது கல்விச் செலவை வேறு ஒருவர் ஏற்பார் அல்லவா? இப்படிப்பட்ட நிலையில் பாபா எனது முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுவிட்டார். நான் என் வழியே போய்க் கொண்டிருக்கிறேன்.
சமுத்திரத்தின் அந்தக் கரையைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்வது போன்றதுதான் பாபா எனக்குச் செய்த அற்புதங்களுக்கு எல்லை போட நினைப்பது.
நான் இவ்வளவு தூரம் தெளிவாகப் பேசினாலும், ஒவ்வொரு நாளும் எல்லாவற்றையும் மறந்து விட்டு புதிதாக பாபாவை வணங்குபவன் போல் இருக்கிறேன். எனக்குள் இன்னும் பக்தியில்லை என்பதைப் போல உணர்கிறேன். எனது செயல்களும் நிலைகளும் குறையுடன் இருப்பதாகவே காண்கிறேன். ஆகவே மேலும் மேலும் தொடர்ந்துகொண்டே இருக்கிறேன்.
என்னை மாதிரி நீங்களும் இருக்கவேண்டும் என நான் வலியுறுத்தவில்லை. முதலில் பாபா மீது நம்பிக்கை வையுங்கள். நாளடைவில் அவரே இந்த நிலைக்கு கொண்டுவருவார். யதார்த்தமாக இருங்கள், பக்திக்கான அடையாளத்தை வெளித்தோற்றத்தில் கூடுமானவரை காட்டவேண்டாம். அப்படியிருந்தால் பாபாவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
இப்படிப்பட்டவர்களை தடை செய்யாதீர்கள். அவர்கள் கேட்பதைப் போல நூறுமடங்கு, ஆயிரம் மடங்கு கொடுத்து இவர்களை என் பக்கம் இழுத்து, அவர்களைச் சிறிது சிறிதாக மாற்ற வேண்டியிருக்கிறது என்றார் பாபா. இப்படிப்பட்ட நிலையைக் கொடுத்த பாபா நூறு விழுக்காடு அற்புதம் செய்தவர் எனக்கு.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...