பழையனூர் சிவன் கோயில்
மணவூரில் பாபா ஆலயம் அமைக்க இடம் பார்க்கச் சென்றபோது திருவாலங்காடு, பழையனூர் ஆகிய ஊர்களைக் கடக்க நேரிட்டது.
பதிகம் பிறந்த ஊர்; இறைவன் திருநடனம் செய்த ஊர்; கற்காலம் முதற்கொண்டு
இருக்கும் பழைய ஊர்; வெறும் கல்லாகத் தெரியும்
இந்த ஊர்க்கடவுள்தான் அம்மையே
வருக என ஒரு மானிடப் பெண்ணை அன்புடன்
அழைத்த ஊர்.
இரவில் இந்த ஊர் சுடலையில் பேய்கள் இசைக்க, சுடலைப் பொடிகளைப் பூசிக்கொண்டு இறைவன் நடனமாடும்
ஊர் இது என்றெல்லாம் இளம் வயதில் கேள்விப்பட்ட
திருத்தலம் இது.
பொய்யாய் அழுவோர்க்கு உதாரணமாகக்கூறப்படுகிற “நீலிக்கண்ணீர்” என்ற காரணப்பெயர் பிறந்த
ஊர். பேயின் பேச்சைக் கேட்டு வாக்களித்த எழுபது வேளாளர்கள்
ஒன்றாகத்தீக்குளித்த சிறப்புடைய ஊர் இது.
இதை தரிசிக்க நினைத்தேன். ஆறுமுகமும் வேணுகோபாலனும் சரி என்று கூறிவிட்டார்கள்.
திருவாலங்காட்டுக்கு அருகிலுள்ள பழையனூர் கற்கால வரலாற்றுக்கு முற்பட்ட சிறப்புடையது. முதுமக்கள் தாழி, கருவிகள் உள்ளிட்ட பல பொருட்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த ஊர்.
சிவன்கோயில் அருகில்தான் நீலி பற்றிய சம்பவம் நிகழ்ந்து இருக்கும் என நினைத்து, ஒருவரிடம் சிவாலயம் செல்ல
வழி கேட்டோம்.
நான் கோயிலுக்குத்தான் செல்கிறேன் எனக்கூறி எங்களுடன்
வந்தார் துரை கிராமணி என்ற பெரியவர். முதலில்
கைலாசநாதர் கோயில் செல்லலாம் எனக் கூறினார்.
அவர் அழைத்துச் சென்ற ஆலயம் மிகப்பழையது. ஆள் நடமாட்டமே
கிடையாது. பாடல் பெற்ற தலமான இது, ஒரு காலத்தில் மிக்க சிறப்புடையதாக விளங்கியது.
உள்ளே நுழைந்தால் பாபாவின் திருவுருவம் அமர்ந்து வரவேற்கிறது. உடல் சிலிர்த்தது.
கோயில் கருவறை வரை சென்றபோது என்னையறியாமல் சிவனை கட்டித்
தழுவ வேண்டும் என்ற உணர்வு தொற்றிக்கொள்ள,
செய்வதறியாது திகைத்து நின்றேன்.
மனதைக் கட்டுப்படுத்தி சிவ தரிசனத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்தேன். சிவபெருமான் கிழக்கு நோக்கி இருக்கிறார்.
வாசல் வடக்கு நோக்கியிருக்கிறது.
கோயிலுக்கு வெளியே சுவர் வைக்கப்பட்டு, நந்தி துவாரத்தின் வழியாக பகவானை தரிசிக்கும் வகையில் உள்ளது.
இந்த ஊர் பழைய கற்காலம் முதல் உள்ளதாக தொல்பொருள் ஆய்வுகள் கூறுகின்றன. பாடல் பெற்ற தலம் இது.
அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர், காரைக்கால் அம்மையார் ஆகியோர் தொழுத
தலம் இது.
திருவாலங்காட்டுத் திருநடனத்திற்கு முன்பாக ஈசான்யத்தில் தோன்றியதால் மூல விக்ரஹம் எனப்படுகிறது சிவலிங்கம்.
கைலாச நாதர் ஆலயத்தை மணவூரைத்தலைநகராகக் கொண்டு ஆண்ட
சோமநாதன் என்ற தளபதி கட்டியுள்ளார்.
இவர் கட்டிய விநாயகர் கோயிலில் சிலை
உடைந்தபோது, மாற்று சிலையை நிறுவ ஊர் மக்கள் எண்ணிய போது, விநாயகர் அந்த ஊர் கிராமத்
தலைவர் கனவில் தோன்றி உன் வீட்டுப்
பிள்ளைக்கோ பெரியவர்களுக்கோ அங்கஹீனம்
ஏற்பட்டால் தள்ளிவிடுவாயா? என்னை அகற்றவேண்டாம். புதிதாகச் செய்த மூர்த்தியை என் அருகிலேயே பிரதிஷ்டைச் செய்யுங்கள் எனக் கூறினாராம்.
உடைந்த சிலையை அகற்றத் தேவையில்லை என்பதற்குச் சான்றாக நிற்கும் விநாயகர் இவர். இங்குள்ள சிவலிங்கத்தை நிறுவியர்கள் நந்தீஸ்வரரும், துர்வாச முனிவரும் ஆவார்கள்
என தலபுராணம் கூறுகிறது. எப்படி
இங்கே கோயில் உருவானது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
ஆகமப் பொருளை உமாதேவியாருக்கு சிவபெருமான் விளக்கிக்
கொண்டிருந்தபோது, யாரையும் உள்ளே விடக்கூடாது என நந்திக்கு கட்டளையிட்டார். கோபம் மிகுந்த துர்வாசர் வந்த போது, என்ன செய்வது எனத் திகைத்துக்கொண்டிருக்கையில் துர்வாசர் உள்ளே சென்று சிவதரிசனம் செய்தார்.
அவரை அனுப்பிய பிறகு சிவபெருமான், நந்தியை அழைத்து என் பேச்சை
மீறியமையால் என்னைவிட்டு விலகியிருக்கக்
கடவாய் என சாபமிட்டுவிட்டார்.
உமையம்மையார் வேண்டுதல் படி, வில்வக்காட்டில் வில்வ
மரத்தின் அடியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து
108 நாட்கள் வணங்கினால் சாபம் தீரும் என்றார்.
நந்தி தென்னாட்டுக்கு வந்துகொண்டிருந்த போது எதிர்பட்ட துர்வாசர், தன்னால் நந்தி அடைந்த துன்பத்தைப் போக்க, தானும் உதவுவதாகக் கூறினார்.
இருவரும் காசிக்குச் சென்று கங்கையில் நீராடி சிவலிங்கம்
கொண்டு வந்து வில்வாரண்யம் என்ற
பழையனூரில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்கள்.
நாரதரும் இதில் கலந்து கொண்டார்.
இங்குள்ள குளம் அமுத குளம் என்று அழைக்கப்படுகிறது.
பாற்கடலைக் கடைந்த வாசுகி என்ற நாகம், தனது விஷத்தன்மை நீங்க இங்கே தீர்த்தமாடி தோஷம் தீர்ந்தது. இதனால் இது அமுத குளம் எனப்படுகிறது.
108 நாள் முடிவில் சிவபெருமான்
தரிசனம் தந்தார். துர்வாசர்
வேண்டுதல்படி நந்தியின் கொம்புகளுக்கிடையில் நடனம்
ஆடினார். இந்த லிங்கத்திற்குத்தான்
சோமநாதன் என்ற தளபதி கோயில் கட்டினான்.
இந்த தலத்திற்கு வந்தபோது இறைவனைக்கட்டித் தழுவவேண்டும்
என்ற உந்துதல் ஏன் அடியேனுக்கு ஏற்பட்டது?
என வினவினேன்.
காரைக்காலம்மையார் இந்தத் தலத்திற்கு வந்து, அப்பா உன் எல்லைக்குள் வந்துவிட்டேன் என்று தழுதழுக்கக்
கூறியபோது, சிவன் எழுந்து வந்து, அம்மையே வருக எனக் கூறி அவரை இறுகத் தழுவிக்கொண்டது இத்திருத்தலம்.
மனம் குழைந்து அம்மையை தாய் உள்ளத்தோடு இறுகத்
தழுவியமையால்தான் இவருக்கு தழுவிக் குழைந்த ஈசர் என்ற
பெயர் ஏற்பட்டது.
தந்தையும் மகளும் தழுவிக் கொண்டதை மகிழ்ந்து பார்த்த பார்வதிக்கு சவுந்தர்ய நாயகி என்ற பெயர். அம்மையப்பன் இருவரும் காட்சி தந்த இடம் இது.
இந்தத் தகவலைக் கேட்டபிறகுதான், ஐயோ தவறிழைத்துவிட்டேன். என் ஐயன் என்னையும் தழுவக் குழைந்திருக்க, அறியாப் பிழையால் தள்ளிப் போனேனே என வருந்தி,
இறைவனை வணங்கி வெளியே வந்தேன்.
பழையனூர் நீலி பற்றி கேட்டபோது, துரை கிராமணி கதைகளைச் சொன்னார். சுமார்
இரண்டாயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.
காஞ்சீபுரத்தில் வாழ்ந்த அந்தணர் புவனபதி, காசிக்குச் சென்று
விஸ்வநாதரை வழிபட்டு வந்தார். இவர் திருமணமானவர்
என்பதை அறியாத சத்தியஞானி, தனது மகள் நவக்கியானி என்ற பெண்ணை திருமணம் செய்துதந்தார். காஞ்சி சென்று பெற்றோரை தரிசித்து வருவதாக புவனபதி கூறியபோது, நவக்கியானியும். அவளது அண்ணன் சிவக்கியானியும் உடன்
வந்தார்கள்.
இவர்களை காஞ்சிபுரத்திற்கு அழைத்துச்சென்றால் தனது முதல்
மனைவியுடன் பிரச்சினை வரும் என பயந்த புவனபதி,
மனைவியைக் கொன்று விடத் திட்டமிட்டான். தனக்கு தாகம் எடுப்பதாகக்கூறி
மைத்துனரை தண்ணீர் கொண்டுவர காட்டில் அனுப்பினான். அதுவரை
காத்திருக்கலாம் என்ற அவனது யோசனையைக் கேட்ட
நவக்கியானி, களைப்பின் காரணமாக கணவனின் மடிமீது தலைவைத்து உறங்கினாள்.
இதுதான் சரியான நேரம் என நினைத்த புவனபதி, அவள் தலையில் கல்லைப்
போட்டுக் கொன்று விட்டு தப்பித்துச்
சென்றான். தண்ணீருடன் வந்து தங்கையின் கோலத்தைப் பார்த்த
சிவக்கியானி தூக்கிட்டு இறந்தான்.
இவர்கள் நீலன் நீலி என்ற பேய்களாக மாறியதாக கதை கூறுகிறது. ஆனால் துரைகிராமணி, நீலி பழையனூர் வேளாளர்
வீட்டில் பெண்ணாகப் பிறந்திருந்தாள்
என்றும், பகலில் பெண்ணாகவும் இரவில்
பேயாகவும் மாறி தனது கணவன் வருகைக்காகக்
காத்திருந்தாள் எனவும் கூறுகிறார்.
நீலன் திருவாலங்காட்டில் ஒரு கருவேல மரத்தில்
குடியிருந்தான். அம்மரத்தை ஓர் வேளாளர் ஏர்க்கால் செய்ய
வெட்டிவிட்டார். இதனால் சினம் அடைந்த நீலன்
அப்பகுதியில் வருவோர் போவோரை துன்புறுத்தினான்.
சிவன் ஆலய குருக்களைத் துன்புறுத்த,
அவர் சிவனிடம் முறையிட்டார்.
தனது பூத கணத்தில் குண்டோதரனை அனுப்பி சிவபெருமான் நீலனை
அழித்துவிட்டார்.
நீலன் அழிய மூலக்காரணமான வேளாளர் குடியை அழிக்க நீலி சபதமேற்று தக்க தருணம் பார்த்திருந்தாள். இந்நிலையில் புவனபதியும்
அப்பிறவி முடிந்து இறந்து வணிகர் மரபில்
தரிசனன் என்ற பெயரில் பிறந்து பெரும் செல்வ வளம்
மிக்கவனாக விளங்கினான்.
இவனுடைய ஜோதிடத்தைக் கணித்த ஜோதிடர் வடக்குப் பக்கம் போகவேண்டாம், பேய் ஆபத்து இருக்கிறது என்று எச்சரித்தார்.
பேயிடமிருந்து தப்பிக்க ஒரு கத்தியை
மந்திரித்து அவன் இடுப்பிலேயே எப்போதும் வைத்திருக்கச் சொன்னார்.
செல்வச் செழிப்பால் செருக்கடைந்த தரிசனன், பழையனூருக்கு வணிகம் செய்ய
வந்தான். அவனை அடையாளம் கண்டுகொண்ட
நீலி, பழி வாங்கத் துரத்தினாள். அவன் கத்தியைக் காட்டியதும் மறைந்தாள்.
ஆனால் அவனை விடாமல் பின்தொடர்ந்தாள்.
பேய் பயத்தால் நடுங்கிய தரிசனன் பழைனூரை அடைந்து அங்கு
வாழ்ந்த வேளாளர்களை தஞ்சம் அடைந்து, தன்னை பேயிடமிருந்து காப்பாற்றவேண்டும் எனக் கூறினான்.
நீலியோ, தரிசனன் மனைவி போன்ற உருவில் வந்தாள். கள்ளிச்
செடியைக் கிள்ளி இடுப்பில் வைத்தாள். அது குழந்தையாக
மாறியது. அவளும் வேளாளர்களிடம் வந்து,
இவருக்கு புத்தி
சுவாதீனம் இல்லை. சண்டை போட்டுக் கொண்டு என்னிடம்
கோபித்துக்கொண்டு வந்துவிட்டார். நீங்கள் சமாதானம் செய்து
எங்களை சேர்ப்பிக்க வேண்டும் என கோ வென அலறி
அழுதாள்.
ஐயோ இவள் பெண்ணல்ல பேய் என தன் கண்ணுக்குத் தெரிகிற உருவத்தைப் பார்த்துக்கூறினான். அவர்களுடைய கண்களுக்கு
அழகிய பெண்ணாகத் தெரிந்த அவளைப்
பார்த்து இவன் பேய் என்கிறானே நிச்சயம்
புத்தி சுவாதீனம் இல்லாதவனாகத்தான் இருப்பான்
என வேளாளர் நினைத்தார்கள்.
நீலியின் இடுப்பிலிருந்து இறங்கிய குழந்தையும் அவனை அப்பா
என அழைத்தபடி காலைக்கட்டிக்கொண்டது. இதனால் வேளாளர்கள் நீலியிடம் பரிதாபம் கொண்டு
அவள் சொன்னதை உண்மை என நம்பி அவனுக்குச்
சமாதானம் சொன்னார்கள்.
இன்றிரவு இந்த வீட்டில் தங்கு. காலையில் நாங்கள் வந்து நியாயம் பேசிக்கொள்கிறோம் என்று கூறினார்கள். ஐயோ, இவள் என்னைக் கொன்றுவிடுவாள் என அவன் எவ்வளவோ கெஞ்சினான். அவர்கள் சிவலிங்கத்தை சாட்சி வைத்து, ஒருவேளை உன் உயிர் போனால் எங்கள் அனைவர்
உயிரையும் தருகிறோம் என்றார்கள்.
அதனால் அந்த சிவனுக்கு சாட்சி பூதேஸ்வரர் என்ற
பெயர் வந்தது.
நீலி வேளாளர்களைப் பார்த்து, ஐயா இவரிடம் கத்தி உள்ளது. கோபத்தில் எங்களைக் கொன்றுவிடுவார், அதை பிடுங்கிக் கொள்ளுங்கள்
என்றாள்.
கத்தி வைத்திருக்கும் காரணத்தை அவன் சொல்லியும் நம்பாமல்,
அதைப் பிடுங்கிக்
கொண்டு, அவர்களை ஒரு வீட்டில் விட்டுச் சென்றார்கள். வீட்டில் நுழைந்த நீலி கதவைத் தாழிட்டாள். அவனிடம் அவனது முற்பிறவி கதையையும், தன்னை அவன் கொன்றதையும் கூறியதோடு, அவனை இரண்டாகக் கிழித்துப்
போட்டாள். அதே வேகத்துடன் குழந்தையைத்
தூக்கிக்கொண்டு திருவாலங்காடு வந்த அவள்,
ஓரிடத்திலிருந்த பாறைமீது குழந்தையை வீசி, தனது காலால் அதை நசுக்கிக் கொன்றாள்.
காலையில் வேளாளர்கள் ஒன்றுகூடி நீலியும் அவள் கணவனும் தங்கிய வீட்டுக்கு வந்து, கதவைத் தட்டினார்கள். வீடு
திறக்கப்படவில்லை. முன்புறமும் பின்புறமும்
தாளிடப்பட்டிருந்தது.
வீட்டின் கூரையைப் பிரித்துப் பார்த்ததும் தரிசனன் உடல் இரண்டாகக் கிழிக்கப்பட்டு கிடப்பது தெரிந்தது. பேயின் பொய் அழுகையை நம்பி ஏமாந்ததை உணர்ந்தார்கள். குழந்தையின் உடல் நசுங்கி ரத்த சகதியாகக் கிடந்ததையும் பார்த்தார்கள்.
அவனது மரணத்திற்குக் காரணமான தாங்கள், தங்களுடைய வாக்கின்படி
உயிரைத் துறப்பது என முடிவு செய்தார்கள்.
கோயிலுக்கு எதிரில் மிகப்பெரிய தீக்குண்டம் உண்டாக்கி அதில் இறங்கி உயிர்த்தியாகம் செய்தார்கள். உலக வரலாற்றில் சொன்ன சொல்லைக் காக்க இவ்வளவு பேர் உயிர்த்தியாகம் செய்தது இந்த ஊரில் மட்டும்தான். எழுபது பேரில் ஒருவர் மட்டும் வயலில் ஏர் உழச் சென்றுவிட்டார். அவருக்கு இந்த நிகழ்வுகள் எதுவும் தெரியவில்லை. அவருக்கு உணவு எடுத்துச் சென்ற மகள்கூறியதும், நாமும்தானே வாக்களித்தோம் என்று வருந்திய அவர், ஏர்க்காலை எடுத்து தனது
மார்பில் குத்திக் கொண்டு உயிர்த்துறந்தார். அவரது
உடலும் தீக்குண்டத்தில் தகனம் செய்யப்பட்டது.
நீலியால் வேளாளர்கள் எழுபது பேர் இறந்த இடத்தில் நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. அரிச்சந்திரனைவிட ஆயிரம் மடங்கு உயர்ந்த மக்கள் வாழ்ந்த நல்லூர் இது.
துரை கிராமணி, பழையனூர் நீலி தனது பிள்ளையைக் கொன்ற
இடத்தையும் காட்டினார். சாலையை ஒட்டியிருக்கிறது.
கழுவிப் பார்த்தால் இன்றளவும் ரத்தக்கறை
தெரிகிறது என்றார்.
நீலி கொழுக்கட்டை சுட்ட இடம் காட்டுவதாக அழைத்துச் சென்றார். சுடுகாட்டை ஒட்டியுள்ள அந்த இடத்தில் பதினொன்னரை அடி அகலம், அதே அளவு நீளமும், ஐந்து அங்குல கணமும் உள்ள ஒரே கல்லால் ஆன கல் அடுப்பு காணப்படுகிறது. இதே அளவில்
மூன்று உள்ளன.
இதை எப்படி வடித்தார்கள் என்பதே ஆச்சர்யமான விஷயம். இந்த
இடத்திலிருந்து நீலி எனக்கூப்பிட்டால், அதற்கு பதிலும் வருகிறது எனக் கூறினார் துரை.
இங்கே நிற்கிற இந்த இடத்தில், மழை வெயிலுக்கு என்றேனும்
வாணியச் செட்டி இனத்தைச்சேர்ந்த ஒருவன் ஒதுங்கும்போது இக்கல் அடுப்பு அவன் தலையில் விழும் என்றும் அதுவரை விழாது என்றும் நீலி சாபமிட்டதாகக் கூறினார்.
சாட்சி பூதேஸ்வரருக்கு கோயில் அமைத்து உள்ளார்கள். இந்த ஆலயத்தில் நந்தி கிடையாது என்பது தனிச்சிறப்பு.
கோயில் பூட்டியிருந்தது. கதவு திறக்கவில்லை. சாவித் துவாரம் வழியாக அவரை தரிசித்துவிட்டு திருவாலங்காடு வந்தேன்.
திருவாலங்காடு
ஆலங்காட்டு இறைவனை இளம் வயதிலேயே தரிசிக்க ஆவல் கொண்டேன். இறையருள் இந்த வயதில்தான்
சித்தித்தது.
இங்கிருக்கும் தீர்த்தத்தில் குளித்து பத்ர காளியை முதலில் தரிசிக்குமாறு பார்வதி அம்மையார் கூறியிருந்தார்.
துரை கிராமணியும் உடன் வந்திருந்தார். அவரது உதவியுடன் திருக் குளத்தில் இறங்கி உடலும் உள்ளமும் குளிர நீராடினேன்.
காமனை எரித்தபோது ஏற்பட்ட வெப்பம் தாங்காமல் தேவர்களும்
ரிஷிகளும் தவித்த போது வெப்பத்தையும் தாகத்தையும் தணிக்க, சிவபெருமான் தனது கையை ஊன்றி உண்டாக்கிய திருக்குளம் இது. இதனால் இதற்கு சிவகரத் தீர்த்தம் என்று பெயர்.
ஐந்து ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ள திருக்குளம். அப்படியாயின் என் ஐயன் மண்ணுலகு வந்து ஊன்றிய திருக்கரத்தின் நீளம் இக்குளத்தின் நீளமாக இருக்கிறது.
இறைவனோடு நடனப் போட்டியிட்டு தோற்ற வெட்கத்தில் தலை சாய்ந்து இருந்தாள் தாயார். ஆதி கோயிலை நகரத்தார் பெருமக்கள் புதுப்பித்திருப்பதாக
துரை கூறினார். ஆனால் அவர்களால் நடன சபையை மட்டும்
புதுப்பிக்க முடியவில்லை. அந்த சபையில்
எலும்புருவாகிய அன்னையின் உடல் உள்ளது.
அவர் அங்கிருந்து பாட, இறைவன் சதங்கை ஒலிக்க நடனம் ஆடுவதாகவும், ஒருமைச் சிந்தையோடு சுவரில்
காது வைத்துக் கேட்க இன்றும் இவ்வொலியை கேட்கலாம் என்றார்
துரை.
வெறும் ஆலமரக்காடாக இருந்ததால் வழி தெரியாமல் திகைத்த காரைக்கால் அம்மையார், ஐயனிடம் வழிகேட்டபோது
மேற்குநோக்கித்தன் லிங்கத் திருமேனியை திருப்பி இவ்வழியே செல் எனக் கூறினாராம். இதனால் பழையனூர் சிவனுக்கு
வழிகாட்டிய ஈசன் என்றும் பெயர்.
பழையனூரிலிருந்து திருவாலங்காடு வரை லிங்க உருவமாகவே வழிநெடுகக் காட்சி தந்தார் சிவபெருமான். அவ்விடத்தில் கால் பதிக்க அஞ்சிய அம்மையார் தலையால் நடந்து
திருவாலங்காடு வந்தடைந்தார். அங்கே இறைவனின் திருநடனம் கண்டு களிப்புற்று சிவனடியில் இடம் கொண்டருளுகிறார்.
இன்னும் நிறைய மறைபொருட்கள் நிறைந்து விளங்குகிற இந்த திருவாலங்காட்டுத் தலத்தை தரிசித்து நாள் முழுக்க சிவச் சிந்தையில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்தேன். வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை சென்று இந்த இடங்களை தரிசித்து வாருங்கள்.
ஸ்ரீ சாயி வரதராஜன்
No comments:
Post a Comment