Tuesday, May 3, 2016

பிரார்த்தனை செய்வோம்!

உண்மையுள்ள சாயி பக்தர்களே! இந்த நாள் அனைவருக்கும் இனிதாக சந்தோக்ஷமாக, சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித் தருவதற்கு அழைத்துச் செல், என பாபாவிடம் பிரார்த்தனை செய்வோம்.
உண்மையுள்ள சாயி பக்தர்களே என ஆரம்பித்திருப்பதன் காரணம், எவர் ஒருவர் சாயி தரிசனம்  படிக்கிறார்களோ அவர்கள் அனைவரும் பாபாவின் மீது உண்மையான பக்தி மற்றும் அன்புடையவர்கள் என நான் கருதுகிறேன்.
அவர்களைத் தவிர வேறு யாராலும் சாயி தரிசனம் மற்றும் சாயி வரதராஜன் அப்பா எழுதிய புத்தகங்களைப் படிக்க முடியாது. அந்தப் புத்தகங்களின் வார்த்தைகளில் ஒருவித ஈர்ப்பு விசை இருக்கிறது, படிக்கப்படிக்க ஒருவித பரவசம் நம்மை அடையும்.
நான் பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்திற்கு ஒன்பது மாதங்களாக வருகிறேன். இதற்கு முன்பு இருந்த நிலை, ஓ!, அதை நினைத்துப் பார்க்கவும் கசக்கிறது. பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்திற்கு எனது அறிமுகம் எப்படியென்றால்,  “நான் கூடுவாஞ்சேரியில் உள்ள பாபா ஆலயத்திற்கு ஒருநாள் சென்றிருந்தேன். அப்போது தேவையான பொருள் வாங்கக்கடைக்குச் சென்றேன். அது எனக்கு மிகவும் புதுமையான இடம். அங்கு சாயி தரிசனம் இதழ் தொங்கவிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் சாதாரண மாத இதழ் என்று நினைத்தேன். கடைக்காரர் புத்தகம் பதினைந்து ரூபாய்தான் வாங்கிக் கொள்கிறீர்களா எனக்கேட்டார்.
என்னிடம் பதினைந்து ரூபாய் இல்லை, வேண்டாம் எனக் கூறிவிட்டேன். கடைக்காரர் என்னைப் பார்த்து, அம்மா புத்தகத்தைப் படிப்பாயா? எனக் கேட்டார். படிப்பேன் எனக் கூறியதும், சரி இந்தப் புத்தகத்தை நீயே வைத்துக்கொள் எனக் கொடுத்தார். மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக்கொண்டேன்.
இதுதான் எனக்கு சாயி தரிசனத்தின் முதல் அறிமுகம். அந்தப் புத்தகம் மார்ச் மாத இதழ். அப்போது என்னை துன்பமும், கர்மமும் சூழ்ந்திருந்த காலம். அடுத்த மாத இதழ் எப்படியாவது பிரார்த்தனை மையத்திற்குச் சென்று வாங்கும் எண்ணம் அந்தப் புத்தகத்தைப் படித்தவுடனே வந்துவிட்டது.
அன்றிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு மாத சாயி தரிசனமும் நான் நேரில் சென்று வாங்கிவருகிறேன்.  என்று நான் பிரார்த்தனை மையத்தை மிதித்தேனோ அன்றே என் மனதில் இருந்த மாய பிரமைகள் ஒழிந்தன.
என்னைப் பொறுத்தவரை பெருங்களத்தூர் பிரார்த்தனை மையமே எனது துவாரகாமாயி. அன்றிலிருந்து இன்றுவரை துன்பத்தை நினைத்துத் துன்பப்பட்டு அழுகிற ஜெயாவை நான் பார்த்ததில்லை.
அப்பா எழுதிய அனைத்துப் புத்தகங்களையும் படிக்க வேண்டும் என ஆசை. இன்று வரை நான்கு புத்தகங்களைப்படித்திருக்கிறேன். அதில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் வாழ்க்கை யின் தத்துவத்தை அளிக்கிறது.
எனக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் கஷ்டப்படுகிற நிலையிருந்தால், உடனடியாக, உன் பாரத்தை என் மீது வைத்துவிடு என்ற புத்கத்தை கொடுத்துவிடுவேன். படித்த அனைவரும் இந்தப் புத்தகம் எனக்கு மிகுந்த ஆறுதலைத் தருகிறது என்பார்கள். இது என்னுடையது மட்டுமல்ல, படித்த அனைவரது அனுபவமும் கூட.
நம் அனைவரது கஷ்டங்களையும் போக்க அப்பா நமக்காகப் பிரார்த்தனை செய்கிறார். ஆனால், அப்பாவுக்காகப்பிரார்த்தனை செய்கிறவர்கள் மிகக் குறைவு. அவருக்காகப் பிரார்த்தனை செய்வோம்.
ஏழைகளின் உதவியுடன் அவர் உருவாக்கி வரும் கீரப்பாக்கம் பாபா ஆலயம் சிறப்பாக அமையப்பிரார்த்திக்கலாம் வாருங்கள்.
எஸ். ஜெயா

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...